சேலம்: சேலம் அருகே நேற்று காலை மின்னல் வேகத்தில் சென்ற தனியார் பஸ், பைக்குகள் மீது மோதியதில் முன்னால் சென்ற லாரிக்கும் பஸ்சுக்கும் இடையில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் நசுங்கி பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் வீராணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் இருந்து சேலத்திற்கு டாரஸ் லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. சுக்கம்பட்டி அரசு பள்ளி அருகே காலை 10.30 மணி அளவில் வந்தபோது வேகத்தடையை பார்த்து டிரைவர் பிரேக் போட்டு மெதுவாக ஓட்டினார். அந்த லாரியின் பின்னால் ஒரே பைக்கில் 5 பேரும், மற்றொரு பைக்கில் 3 பேரும் வந்துள்ளனர்.
அவர்களும் வேகத்தடையில் மெதுவாக வந்தனர். அந்த நேரத்தில் பைக்குகளுக்கு பின்னால் சேலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் வந்த தனியார் பஸ், 2 பைக்குகள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த 2 குடும்பத்தினரும், லாரி மற்றும் பஸ்சின் இடையில் சிக்கி நசுங்கினர். இந்த கோர விபத்தில் கணவன், மனைவி மற்றும் 11 மாத ஆண் குழந்தை, மற்றொரு பைக்கில் வந்த வேதவள்ளி (26) என 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நசுங்கி பலியாகினர்.
தனியார் பஸ்சின் முன்பகுதியில் வேதவள்ளியின் சடலம் தொங்கிக் கொண்டிருந்த காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. அப்பகுதி மக்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கித் துடித்தவர்களை மீட்க போராடினர். தகவல் அறிந்து வீராணம் போலீசாரும் வந்து வேதவள்ளியின் கணவர் லட்சுமணன் (38), அவரது மகன்கள் சின்னதுரை (7), திலிப் (4), வேதவள்ளியின் சகோதரி மகள் ஜஸ்விகா (11 மாதம்) ஆகியோரை படுகாயத்துடன் மீட்டனர். மேலும் பஸ்சில் இருந்த 12 பயணிகளும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஜஸ்விகா உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
வேதவள்ளியின் குடும்பத்தினர் சுக்கம்பட்டி அருகே பூவனூரில் இருந்து வலசையூரில் திருமண நிகழ்ச்சிக்காக வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் மற்றொரு பைக்கில் வந்தவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கமுள்ள எம்.தாதம்பட்டியை சேர்ந்த முருகன், அவரது மனைவி நந்தினி, குழந்தை கவின் என்பது தெரியவந்தது. இவர்களும் திருமண நிகழ்ச்சிக்காக சேலம் நோக்கி வந்தபோது விபத்தில் சிக்கி உள்ளனர். முருகன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாடல் சர்வேயராக சூளகிரி பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் ரமேஷ், கண்டக்டர் சின்னதம்பி ஆகியோர் தப்பியோடிவிட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: நிவாரண நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம் வலசையூர் அருகே உள்ள சுக்கம்பட்டி கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நடந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன். விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு
ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து விடுவித்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் பஸ் டிரைவரின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து
விபத்து குறித்து அறிந்ததும், சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதில், முதற்கட்டமாக வேகத்தடையில் லாரி சென்ற போது, பின்னால் 2 பைக்குகள் சென்றுள்ளது. அதற்கு பின்னால் வந்த பஸ்சை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் டிரைவர் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிந்தது. அந்த இடத்தில் வேகத்தடை இருப்பது அந்த பஸ் டிரைவருக்கு தெரியும். ஆனால் அங்கு டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால், விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரின் லைசென்சை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல், பஸ்சின் தகுதிச்சான்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆ.இர. விஜய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.