November 22, 2024

அகற்றதான் அதிகாரம்; அபராதம் விதிக்க முடியாது: விளம்பர பலகைகள்

தமிழகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதியில்லாமல் விளம்பர பதாகைகள், பலகைகள் அமைத்தால், 5,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கலாம் என்ற அதிகாரிகளின் ஆலோசனையை அரசு நிராகரித்துள்ளது.

தமிழகத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி, விளம்பர பலகைகள், பதாகைகள், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அரசியல் கட்சியினர் மற்றும் விளம்பர நிறுவனங்கள் வைக்கும் விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளால், ஆங்காங்கே விபத்துகள் நடந்து வருகின்றன; சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அனுமதி வழங்கவில்லை

இதற்கிடையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று, விளம்பர பலகைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமலும், உள்ளாட்சி விதிகளின் குறிப்பிட்டுள்ள அளவுகளில் இல்லாமலும், விளம்பர பலகைகள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு அனுமதி வழங்கும்படி, விளம்பர நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையில், 841 விளம்பர பலகைகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

மாநகராட்சியிடம் புரோக்கர்கள் வாயிலாக, 200 விளம்பர பதாகைகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை முறைப்படி அமைக்கப்படாததால், எந்தவொரு நிறுவன விளம்பரங்களுக்கும் மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், விதிகளை மீறி ராட்சத விளம்பர பலகைகள், பதாகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அகற்றுவதுடன், அனுமதியின்றி வைத்ததற்காக, 5,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கலாம் என, அரசுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

அரசியல் கட்சியினர் மற்றும் புரோக்கர்கள் தலையிட்டதால், அதிகாரிகளின் யோசனையை அரசு நிராகரித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான மற்றும் அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது.

சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லாததால், விளம்பர பலகை விவகாரமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஓயாது என்றே தெரிகிறது.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சாலை அளவுக்கு ஏற்ப, விளம்பர பதாகைகள், பலகைகள் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. ஒருமுறை பெறப்படும் அனுமதி மூன்றாண்டுக்கு செல்லுபடியாகும். அதேநேரம், ஒவ்வொரு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு முன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

நோட்டீஸ்

ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் போதும், காவல் துறையின் தடையில்லா சான்று பெறுவது அவசியம். சென்னை போன்ற பெருநகரங்களில் முறைப்படியாக இதுவரை யாரும் அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை.

மும்பை சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள விளம்பர பதாகைகள், பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள சட்டத்தின்படி, விளம்பர பலகைகளை, சம்பந்தப்பட்டவர்களே அகற்ற நோட்டீஸ் வழங்கப்படும்.

அவர்கள் ஏழு நாட்களுக்குள் அகற்றாதபட்சத்தில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அகற்றி, அதற்கான செலவை அந்நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், அனுமதி இல்லாமல் வைத்ததற்காக, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.அதிகாரிகள் கொடுத்த தண்டனை சட்டங்களையும், அரசு ஏற்க மறுத்து விட்டது. இதனால், விளம்பர நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி, விளம்பர பதாகைகள், பலகைகளை வைக்கின்றன

Dr. A.R. Vijayshankar/ Editor