November 15, 2024

தினம் ஒரு சட்டம் கற்றுக் கொள்ளுங்கள் அது உங்களை தலை நிமிர்ந்து வாழ செய்யும்..

பக்கத்து வீட்டுக்காரருடன் எழும் தகராறுகள்.

உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களை தவறாக பேசினால் புகார் கொடுப்பதற்கு முன் அது கிரிமினல் வழக்கா அல்லது சிவில் வழக்கா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு பிறகு புகாரை எப்படி கொடுப்பது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் அவர் பேசியது மூலமாக நீங்கள் மிரட்டப்படுகிறீர்களா அல்லது கெட்ட வார்த்தையில் அவர் பேசுகிறாரா என்பதை தெளிவாக கவனிக்க வேண்டும், ஏனென்றால் ஒருவரை கெட்ட வார்த்தைகள் பேசுவது, மிரட்டுவது, கொலை மிரட்டல் விடுவது, இவை அனைத்தும் கிரிமினல் குற்றங்கள் ஆகும்.

ஒரு நபரை திட்டுவது, மிரட்டுவது, போன்றவை அவரை நேரடியாக பாதிக்கும் இதனால் இவை கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. இந்த கிரிமினல் குற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்காக காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள், கிரிமினல் குற்றங்கள் நடைபெறுகிறது என்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

ஒருவேளை உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களை பற்றி தவறாக பேசி அவதூறுகளை பரப்புகிறார் என்றால் அது உங்களை நேரடியாக பாதிக்காது அது உங்களது நற்பெயரை சமூகத்தில் குறைக்கும்.

இவை சிவில் குற்றங்களாக கருதப்பட்டு இதற்கு மான நஷ்ட வழக்குகள் பதிவிடப்படுகிறது, இதற்கும் காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்கலாம் ஆனால் எப்படி அணுகலாம் இந்த வழக்குகளை எப்படி கையாளுவது என்பதை தொடர்ந்து தெரிந்துகொள்ளும்.

கிரிமினல் குற்றம் என்றால் எங்கே புகார் அளிப்பது உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களை கெட்ட வார்த்தையில் பேசினாலோ அல்லது கொலை மிரட்டல் விடுத்தாலோ நேரடியாக அது உங்களை பாதிக்கும் பட்சத்தில் அது கிரிமினல் வழக்காக கருதப்படுகிறது.

கிரிமினல் குற்றங்களை விசாரணை செய்வதற்கு காவல் துறை இருக்கிறது. கிரிமினல் குற்றத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம்.

ஒரு நபர் கிரிமினல் குற்றத்தை செய்தார் என்றால் புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலைய அதிகாரி அந்த புகாரை பதிவு செய்து அந்த நபரின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார், உண்மையில் அந்த நபர் குற்றம் செய்தவர் என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும்.

காவல் நிலையத்தில் எப்படி புகார் அளிக்க வேண்டும்

காவல் நிலையத்தில் நீங்கள் புகார் அளிக்கும் போது அதை வாய்மொழியாக இல்லாமல் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுப்பது தான் வழிமுறையாகும். என்ன பிரச்சனை நடந்தது, எதிர்மனுதாரருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம், குற்றத்திற்கான காரணம் என்ன, அவர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையை பற்றி தெளிவாக எழுதி எழுத்துப்பூர்வமான ஒரு புகாரை காவல்நிலையத்தில் கொடுக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உங்களால் எழுத முடியாவிட்டால் காவல் நிலையத்தில் காவல் நிலைய எழுத்தாளர் இருப்பார் அவரிடம் சொல்லச் சொல்ல அவர் உங்களுடைய புகாரை எழுதிக் கொள்வார்.

புகாரை பெற்றுக் கொண்ட பின் என்ன நடக்கும்

காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொண்ட பிறகு அந்த குற்றம் நடந்திருக்கிறதா என்று காவல் நிலைய அதிகாரி ஆய்வு செய்வார். அதன் அடிப்படையில் குற்றம் நடந்திருக்கிறது என்றால் உடனடியாக முதல் தகவல் அறிக்கையை தயார் செய்து குற்றவாளி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் படி குற்றங்கள் தனித்தனியாக பதிவு செய்யப்படும்.

மேலும் வேறு சட்டங்களின் அடிப்படையில் குற்றம் நடைபெற்று இருக்கிறது என்றால் எந்தெந்த கிரிமினல் குற்றங்களின் அடிப்படையில் சம்பவம் நடந்திருக்கிறது என்பதை குறிப்பிட்டு அந்த கிரிமினல் வழக்குகளின் பிரிவுகளை பதிவிட்டு ஒரு காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பார்.

அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மீது சிவில் சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பது எப்படி?

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்களைப் பற்றி தவறாக பேசி அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் தீர்க்க விரும்பினால் நீங்கள் எடுக்க வேண்டிய சில படிகள் உள்ளன:

1.தொடர்பு கொண்டு பேசுங்கள்

உங்கள் அண்டை வீட்டாருடன் வெளிப்படையான மற்றும் நேர்மையாக தொடர்பு கொண்டு பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள், பேசி விஷயத்தைத் தீர்க்க முயற்சி செய்வது நல்லது. அவர்கள் தவறான கருத்துக்களை பரப்புவதன் மூலமாக அண்டை வீட்டாராகிய உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பேசி சரி செய்து கொள்வது நல்லது. உங்களது கவலைகளை அவர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும், இந்த நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தும் மூலமாக பிரச்சனையை தவிர்க்க முடியும்.

2.மத்தியஸ்தம்

நேரடித் தொடர்பு சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், நீங்கள் மத்தியஸ்தம் செய்ய ஏற்பாடு செய்யலாம். மத்தியஸ்தம் என்பது உங்களுக்கும் உங்கள் பக்கத்து வீட்டுகாரருக்கும் நடுநிலையான ஒருவரை தொடர்பு கொண்டு பேசி மத்தியஸ்தம் செய்து இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும், அவர் உங்களுக்கும் உங்கள் அண்டை வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றி பேசி உங்களுக்குள் பரஸ்பரம் ஒரு புரிதலை ஏற்படுத்த முடியும், இதன் மூலமாக உங்களுக்குள் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடு பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை காண முடியும். சிறிய பிரச்சனைகளாக இருந்தால் மத்தியஸ்தம் பேசி ஒரு பிரச்சினையை முடிப்பது என்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்..

3.நிறுத்தம் மற்றும் விலகல் கடிதம்

நிலைமையைத் தீர்க்க நீங்கள் முயற்சித்த போதிலும் எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால், நீங்கள் நிறுத்தம் மற்றும் விலகல் கடிதத்தை அனுப்புவது குறித்து பரிசீலிக்கலாம். ஒரு வழக்கறிஞரால் வரைவு செய்யப்பட்ட இந்தக் கடிதம், உங்களைப் பற்றி அவதூறான அல்லது தீங்கிழைக்கும் அறிக்கைகளை உங்கள் அண்டை வீட்டுக்காரர் நிறுத்த வேண்டும் என்று கோருகிறது. இந்தக் கடிதம் சட்டப்பூர்வ அடிப்படையாக இல்லை என்றாலும், அண்டை வீட்டாரோடு நடைப்பெறும் பிரச்சனையை முடித்து வைப்பதற்கு ஒரு கடிதத்தை (லீகல் நோட்டீசை) அனுப்பி வைக்கலாம், இதன் மூலமாக இந்த பிரச்சனையை இதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று அண்டை வீட்டாரிடம் எடுத்துரைத்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். இந்தக் கடிதத்தின் மூலமாக பக்கத்து வீட்டுக்காரர் மேலும் தொடர்ந்து தவறாக பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கடிதத்தின் மூலமாக ஒரு எச்சரிக்கை அறிக்கையை பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியப்படுத்த முடியும். இதன் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கடிதம் எழுதும் முறை தொடர்ந்து ஏற்படுகிற பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இது விளங்குகிறது வீண் வாய் சண்டைகளை தவிர்ப்பதற்கும் இது பயன்படுகிறது.

4.சட்ட நடவடிக்கை

உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களைப் பற்றிய அவதூறுகளை சமூகத்தில் பரப்பி அதன் மூலமாக உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் என்றால் அவர் மீது உரிமையியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். அவர் மீது அவதூறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும், இதன் மூலமாக சமூகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட கெட்ட பெயருக்கு மான நஷ்டமாக அவரிடமிருந்து ஒரு பெருந்தொகையை மான நஷ்டமாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு சட்ட ரீதியாக வழக்கறிஞரை அணுகி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

Dr.A.R.VijAyahankar/ Editor