October 4, 2025

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமும், புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியினை கல்லூரி நிர்வாகத்தோடு இணைந்து யூத் ரெட்கிராஸ் சொசைட்டி, ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் – திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மெடிக்கல் சென்டர், அம்மையப்பன் சிவா மெடிக்கல் லேப் இணைந்து நடத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக அம்மையப்பன் சிவா கண் மற்றும் ரத்த பரிசோதனை மையத்தினர், அமெரிக்காவில் புகழ்பெற்ற தெற்கு அலபாமா பல்கலைகழக பேராசிரியர் மற்றும் மருத்துவ மாணவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள செய்திருந்தனர்.முன்னதாக அக்கல்லூரி பேராசிரியர் மற்றும் திருவாரூர் மாவட்ட யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றார்.கல்லூரியின் தாளாளர் சீனிவாசன் தலைமை ஏற்க, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹேமா துவக்க உரை ஆற்றி, அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார். தெற்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர்கள் டாக்டர். பத்மமாலினி துளசிராமன் மற்றும் டாக்டர் நான்சி ஆயர் ஸ்ரைஸ் இருவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்ததின் நோக்கவுரையை ஆற்றினர்.அடுத்ததாக சமூக ஆர்வலரும், ஐக்கிய நாட்டு சபையின் தன்னார்வலரும், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவருமான முனைவர் துரை ராயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருளின் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு என்ற தலைப்பில் விழா சிறப்புரையாற்றினார். அவரின் சிறப்புரையில்சர்வதேச போதை தடுப்பு நாள் ஜூன் 26 அனுசரிக்கபடுகிறது.போதை பழக்கத்தை தடுப்பதிலும், போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும் யோகாவும் தியானமும் பயனளிக்கும் என்றும்,ஒரு சிறப்பு மருத்துவரிடம் நேரடியாகவோ, குடும்ப சிகிச்சையோ பெறுவதன் மூலம் போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட முடியும் என்ற அறம் சார்ந்த வாழ்க்கையை மாணவர்களுக்கு வலியுறுத்தி பேசினார்.மேலும் கூறுகையில் மனித சமூகத்தைச் சீர் கெடுப்பதில் போதை பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது.போதைபொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்து சென்று விடும்.அநீதிகளும், கொடுமைகளும், அராஜகங்களும், வன்முறையும் நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.போதைபொருள் கடத்தல், விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.போதை பொருள் பயன் படுத்துபவரில் மூன்றில் ஒருவர் பெண் என்பது வேதனைக்குரிய அதிர்ச்சித் தகவல். போதைக்கு அடிமையானவரில் 85 விழுக்காடு படித்தவர்கள். அதில் 75 விழுக்காடு இளைஞர்கள் ஆவர்.மது, சிகரெட் ஆகியவை முதலில் மனித சமுதாயத்தை கெடுத்து, பிறகு அதையும் தாண்டி கஞ்சா, கொக்கைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதை பொருள்கள் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கிறது. மேலும் புகைப்பவர்களை விட புகைப்பவரின் அருகில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்க படுகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி இவர்களின் குடும்பங்கள், இவர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் .அப்பாவி பெண்கள், குழந்தைகள் என்று பலருடைய வாழ்வும் சீரழித்து விடுகிறது. தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டு நாட்டின் முன்னேற்ற பாதைக்கு போதை தடையாக இருக்கிறது. உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவ தளவாடத்திற்கு அடுத்து சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தல் வியாபாரம் கொடி கட்டி பறக்கின்றது.சினிமாவில் போதை பொருள் பயன்பாடுகளுக்கான காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் எடுத்துரைத்தார்.திருவாரூர் மெடிக்கல் சென்டர் புற்று நோயியல் மருத்துவர் பிச்சையம்மாள் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வையும், புற்று நோய் ஏன் ஏற்படுகிறது, நோயின் வகைகள், தடுக்கும் வகைகள், அதற்கான தீர்வு பற்றி மாணவர்களுக்கும், கல்லூரி ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எடுத்துரைத்தார்.சிவா மருத்துவ பரிசோதனை நிலையத்தை சேர்ந்த டாக்டர். அகிலா சிறுநீர் தொற்று பற்றிய விழிப்புணர்வை 250 மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.குடவாசல் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் அசோகன், திருவாரூர் மெடிக்கல் சென்டர் மக்கள் தொடர்பு அதிகாரி செல்வ கணபதி, மருத்துவர் மோனிஷா, சிவா கிளினிக்கல் லேப்பை சேர்ந்த பாலசுந்தரம், சிவசங்கர் (ஆப்டோமெட்ரிஸ்ட்), டாக்டர்.அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவா கிளினிக்கை சேர்ந்த விஷ்ணுப்பிரியா, கலைச்செல்வி, ஜோஸ்பின் மேரி, பரணி, சண்முகப் பிரியா உள்பட 800க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர், கல்லூரி ஊழியர்கள், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இறுதியாக கல்லூரி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.