
விழுப்புரத்திலும் நச்சு சாராய விற்பனையா? விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது. நச்சு சாராயம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற சுமை தூக்கும் தொழிலாளி சென்னையிலிருந்து சரக்குந்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு கடந்த 17-ஆம் தேதி விழுப்புரம் சென்றுள்ளார். அங்கு சரக்கு இறக்கி முடித்த பிறகு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த அவர் இரு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.
வீட்டில் வைத்து அந்த கள்ள சாராய பாக்கெட்டுகளை 20-ஆம் தேதி குடித்த கிருஷ்ணசாமி கடுமையான வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் பின்னர் இராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி விட்டாலும் கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்த கூலி தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு ஏற்பட்ட பாதிப்பு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலும் நச்சு சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதா? அல்லது கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தை எவரேனும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு கொடுத்தார்களா என்ற வினா எழுகிறது. இதற்கு விடை காணப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய நச்சு சாராயம் விற்கப்படுவதைத் தான் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
கள்ள சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பது ஒருபுறமிருக்க, விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதனால் எவரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எவருக்கேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்ககப்படாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line