பென்னாகரம், ஜூன்.10-
கோடை விடுமுறை முடிவுற்று பள்ளிகளில் திறக்கப்படும் நிலையில், கடைசி ஞாயிற்றுக்கிழமையில்
ஒகேனக்கல் அருவிப்பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதிக்கு தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவுற்று பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் கடைசி ஞாயிற்று கிழமையில் ஒகேனக்கல் அருவிபகுதிக்கு சுமார் 50,000 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான அருவிப்பகுதி, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம், மீன் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதிலும் வெயிலினை சமாளிக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி மற்றும் சினி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றின் அழகை காண மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக பெரியபாணி, ஐவர் பாணி, மணல்மேடு வரை காவிரி ஆற்றின் பாறைகளுக்கு இடையே உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி,வாழை, அஞ்சான், பாப்புலேட், பாறை உள்ளிட்ட வகை மீன்களின் விலை அதிகரித்து இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், பேருந்து நிலைய வாகனம் நிற்கும் இடம், சத்திரம் ,முதலைப் பண்ணை,ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் இரு புறங்களில் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்ததால், கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீஸார் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்கள், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.