November 18, 2024

மணப்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சுவாமி ஸ்ரீ கனகவல்லி தாயாருக்கு மஹாலக்ஷ்மி யாகம்

பண்ருட்டி. ஜுன்.11. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்வாமி திருக்கோவில் ( குபேரர் வழிபட்ட ஸ்தலம்) வைகாசி மாத பஞ்சமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கனகவல்லி தாயாருக்கு
மஹாலக்ஷ்மி யாகம் நடைபெற்றது. பொறுமையும், நன்மையும் அருளக்கூடியவள் திருமகள். திருமாலின் திரு மார்பில் வாழக்கூடியவள். கணவனை நீங்கா இயல்பு கொண்டவள். தன்னை வணங்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலமும், செளபாக்ய வாழ்வும் அருள்பவள், பத்மாட்சகன் என்ற அரக்கனி பக்திக்கு மெச்சி திருமகள் அவன் வளர்த்த யாகத்தில் அவனுக்கு மகளாக பிறந்தாள் என புராண கதைகள் உண்டு. யாகத்தில் மகிழ்பவள் மகாலட்சுமி, அதிலும் மகாலட்சுமி ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வேண்டியதை அருள்பவர் மகாலட்சுமி.
இந்திரன் மகாலட்சுமியை வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களையும் , ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றான். குபேரன் லட்சுமியை வணங்கி நவநிதிகளையும், அளகாபுரி பட்டணத்தையும் பெற்றார். மன்மதன் அழகையும், அஸ்வினி தேவர்கள் ஒளியையும், திருமகளிடம் இருந்து பெற்றார்கள் என புராணங்கள் கூறுகின்றன. மஹா லட்சுமி யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு
கடன் தொல்லை நீங்கும், வியாபாரம் மேம்படும், தனம், தானியம், காரிய சித்தி, மாங்கல்யம் பலம், தீராத நோய்கள் தீரும், செல்வாக்கு என சகல நன்மைகளும் உண்டாகும். அந்த வகையில் ஸ்ரீ கனகவல்லி தாயாருக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக நடைபெற்றது. பின்னர் யாக குண்டத்தில் பல்வேறு அபூர்வ சமித்துக்கள், மலர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு ஹோமம் பூர்ணா ஹீதி நடைபெற்றது. மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


ஸ்ரீ கனகவள்ளி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஹோமத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள் பிரசாரம், பஞ்சலோக காசும் வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகிகள்,
கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் மணப்பாக்கம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.‌

சரவணன் /செய்தியாளர் போர்முனை