November 20, 2024

ஆன்லைனில் EC பார்க்கலாமா? வில்லங்க சான்றிதழில் பிழை இருந்தாலும் சரி, தமிழக பதிவுத்துறை வசதி

வில்லங்க சான்றிதழ்களின் முக்கியத்துவம் என்னென்ன? வில்லங்க சான்றிதழில் பிழைகள் இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள், அதற்கு முன்பு, சட்டப்படி அந்த இடங்கள் இல்லாமல் சரியானவைதானா? சம்பந்தப்பட்ட சொத்துக்கு முந்தைய உரிமையாளர்கள் இருக்கிறார்களா? அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்.

இதை தெரிந்து கொள்வதற்காகத்தான், வில்லங்க சான்றிதழ்களை பெறுவார்கள்.. இதன்மூலம், விலைகொடுத்து வாங்கப்போகும் அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழாகும். அதுமட்டுமல்ல, இந்த சொத்து, இதற்கு முன்பு யார் யாரிடம் இருந்தது? எந்தெந்த ஓனர்கள் சொத்தினை அனுபவித்தார்கள்? என்கிற விவரங்களும் வில்லங்க சான்றிதழில் பதிவாகியிருக்கும்.

சொத்துக்கள்: இதனை அறிந்துகொள்வதன் மூலம் சொத்துக்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும்.. அதற்காகவே வில்லங்க சான்றிதழ்கள் தேவையாயிருக்கின்றன..

அதேபோல, அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானாலும், இந்த வில்லங்க சான்றிதழ்கள் தேவையானதாக இருக்கின்றன.. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால்தான், வில்லங்க சான்றிதழ் பெறுவதில் தமிழக அரசும் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தந்துள்ளது.

பதிவுத்துறை: முன்பெல்லாம் இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை.. செல்போனிலேயே பெற்றுக கொள்ளலாம்.. தமிழக பதிவுத்துறையானது, இதற்காகவே வெப்சைட்களில் எளிய முறையை வகுத்துள்ளது.. எனவே, ஆன்லைனில் விண்ணப்பித்து வில்லங்க சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கென யாருக்கும் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை.. புரோக்கர்களுக்கும் இதில் இடமில்லை.. ஆன்லைனிலேயே வில்லங்கத்தை பார்க்க முடியும் என்பதால், நேரமும் மிச்சமாகிறது. எனவே, https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்க்கை கிளிக் செய்தால், வில்லங்க சான்றிதழை பார்க்கலாம்.

ஆன்லைன் விவரம்: அதேபோல, வீடு, நிலம் தொடர்பான பத்திரப்பதிவு செய்துமுடித்துவிட்டால், சில நாட்கள் கழித்தே, அதன் உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வில்லங்க விபரத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.. இப்போது, இதனையும் பதிவுத்துறை எளிமைப்படுத்தியிருக்கிறது.

அந்தவகையில், பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விபரங்களை ஆன்லைனில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.. மேலும், பத்திரப்பதிவு செய்தவரின் செல்போன் நம்பருக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க் அனுப்பப்படும்.. அந்த குறியீட்டில் சென்றால், வில்லங்க சான்றிதழ் விவரங்களை அறியலாம்.

பிழைகள்: அதேபோல, வில்லங்க சான்றிதழில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதை திருத்த உரிய விண்ணப்பம் பெறப்படும். இதன் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து வரைவு திருத்த விபரங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லும். அங்கு தான் இந்த பிழைகள் திருத்தப்படும் என்பது குறிப்படத்தக்கது.

Dr. A.R . Vijay Shankar / Editor