November 15, 2024

கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஓவியப்போட்டி.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுவயல் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது.
ஓவியப் போட்டியில் தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்து ஓவியங்கள் வரைந்தனர்.
தன்னார்வலர் ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சுரேஷ்குமார் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கந்தர்வக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தமிழ்நாடு தினம் குறித்து பேசியதாவது
முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று. எழுச்சியூட்டும் இந்த நன்னாளில், நமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளை நினைவில் தாங்கி, தமிழகத்தின் உரிமைகளையும் தனிச்சிறப்புமிக்க விழுமியங்களையும் காக்கவும் மீட்கவும் உறுதியேற்போம்.

செம்மொழிப் பெருமையும் உலகின் மூத்த நாகரிகச் சிறப்பையும் கொண்ட தமிழ் நிலத்திற்கு, சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 1957-இல் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக நுழைந்தபோதே, இதுகுறித்துப் பேசி பதிவு செய்தார்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் அவர்கள், சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழகத்தின் அழியாத தியாக வரலாறு.
அந்தத் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ் நிலத்திற்கே உரித்தான பெருமைக்கு மகுடம் சூட்டும் முறையிலும், 1967-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் அதற்கான நடைமுறைகளை வகுத்தார்.
அதன் காரணமாக, 1967 ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உணர்ச்சிகரமான ஒருமித்த ஆதரவுடன், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டிய அறிஞர் அண்ணா அவர்கள், மூன்று முறை தமிழ்நாடு எனப் பேரவையில் தமது வெண்கலக் குரலில் எழுச்சி முரசம் கொட்ட, சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என முழக்கமிட்டது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தப் போராட்ட வரலாற்றில் ஜூலை 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மான நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அந்நாளை தமிழ்நாடு நாள் என கொண்டாடி வருகிறோம் என்று பேசினார்.