முகலாய தளபதி அஃப்சல் கானை கொல்வதற்கு சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ‘வாக் நாக்’ எனப்படும் புலி நகம் நாளை (ஜூலை 19) லண்டனில் இருந்து இந்தியா கொண்டு வரப்படுகிறது.
கி.பி.1659-ம் ஆண்டில் பிஜாபூர் சுல்தானின் தளபதியாக இருந்த அஃப்சல் கானை ‘வாக் நாக்’ எனப்படும் புலி நகத்தை பயன்படுத்தி சத்ரபதி சிவாஜி கொன்றதாக கூறப்படுகிறது. தற்போது லண்டனில் விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த புலி நகத்தை 3 ஆண்டுகளுக்கு, இந்தியா கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபரில் கையெழுத்தானது.
அதன்படி, நாளை இந்த ‘வாக் நாக்’ லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு, மகாராஷ்டிராவின் சதாரா நகரத்தில் உள்ள சிவாஜி அருங்காட்சியத்தில் பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டு வைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புலிநகத்தை பொதுமக்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் சுதிர் முங்கண்டிவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
“சத்ரபதி சிவாஜி மகாராஜா 1659-ல் அப்சல் கானைக் கொல்வதற்கு இந்த புலி நக ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டினை நாம் கொண்டாடவுள்ளோம். எனவே, அவர் பயன்படுத்திய புலி நக ஆயுதம் மக்கள் பார்வைக்குக் சிவாஜி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது” என்று கூறினார்.
சதாராவில் உள்ள பிரதாப்கர் கோட்டை அடிவாரத்தில்தான் அப்சல்கானை சிவாஜி கொன்றார். ஆகையால், புலி நக ஆயுதத்தைக் காட்சிப்படுத்த சதாரா அருங்காட்சியகம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.